விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு உடல்களை, நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் இல்லாததால், உறவினர்கள் ஆத்திரம்.
தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகவும், பெரம்பலூர் மாவட்ட ஆம்புலன்ஸ் மூலமாகவும் கொண்டு சென்ற அவலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சித்தலூர் பகுதியை சேர்ந்த, பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி காவியா என்பவர் நேற்று மதியம், பள்ளி முடிந்து, வீட்டிற்கு செல்ல, சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் நேற்று வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின், 20 வயது மகன் பூவரசன் என்ற இளைஞர், சாலை விபத்தில் உயிரிழந்ததார். அவ்வாறு உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை பிணவறையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக, இரு தரப்பினரை சேர்ந்த உறவினர்களும், பிணவறை முன்பு நீண்ட நேரமாக காத்துக் கிடந்த நிலையில், இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் இல்லாததால், கடும் கோபமடைந்தனர். ஒரு கட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளி சிறுமியை, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர். மேலும் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை கொண்டு செல்ல, பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து, இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கொண்டு சென்றனர்.
விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அவலங்களைப் பற்றி இறந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கண்கலங்கியபடியே உடல்களை கொண்டு சென்றனர்.