விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் கிராமம் உள்ளது. அய்யனாபுரம் ஊரணி மேட்டுத்தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஒரே சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபாடு செய்யக்கூடிய முனியாண்டி கோயிலுக்கு செல்லும் பாதையை 6 பேர் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் அமைத்துள்ளதாகவும் அதை அகற்றக் கோரி கடந்த 2.10.2024 ம் தேதி அன்று வட்டாட்சியர் முன்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றாத நிலையில் அப்பகுதி கிராம மக்கள் அய்யனாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வீரகொடி வேளாளர் சமூக தலைவர் மகேஸ்வரன் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு காத்திருக்கின்றனர். மதியம் அங்கேயே சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே ராஜபாளையம் மண்டல துணை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன், விஷ்ணுவர்தன், பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் நடந்து செல்லும் அளவிற்கு பாதை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் ஆக்கிரமிப்புகளை காலி செய்வதற்காக 21 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகவும் கூறி சமரசம் செய்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்றால் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து காத்திருக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.