கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து வந்தன. மழையின் அளவு குறைந்ததால் மீண்டும் நீர்வரத்து குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் நேற்று வினாடிக்கு 18000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது திடீரென அதிகரித்து தற்போது வினாடிக்கு 31,000 கன அடியாக நீடித்து வருகிறது.
அதிகளவு நீர் வரத்து என்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 11வது நாளாக தடை நீடித்து வருகிறது. ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.