தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவனமான ராம் & கோ நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தீபாவளி எங்களுக்கு மகிழ்ச்சி இல்லா தீபாவளியாக உள்ளது என்றும், தமிழக முதலமைச்சர் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன்களில் அக்கறை காட்டி வரும் இவ்வேளையில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்பந்த பணி மேற்கொண்டு வரும் ராம் & கோ நிறுவன ஒப்பந்த பணியாளர்கள், நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்திய குடியரசு தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜெகநாதன் கூறும் பொழுது தமிழக அரசு வழங்கிய சம்பளம் மற்றும் போனஸ் தொகையை ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வில்லை என்றும், தீபாவளிக்கு இரு தினங்கன் முன்புவரை எங்களுக்கு போனஸ் மற்றும் சம்பளம் வழங்க ராம் & கோ நிறுவனத்தை வலியுறுத்திய நிலையில் எங்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்குவதாக உறுதியளித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும். மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப் பட்ட ESI, PF போன்ற பணத்தை முறையாக அலுவலகத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இவை சம்மந்தமாக ராம் & கோ ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
ஊதிய சுரண்டல், முறைகேடுகளில் ராம் & கோ நிறுவனம் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்து வருவதோடு, ராம் & கோ ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ராம் & கோ நிறுவனம் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொடர்ந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பெரியகுளம் நகர் பகுதி முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்ட வெடிகளினால் நகர் பகுதி தூய்மையின்றி குப்பைகளாக சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது. இதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்யுமா என மக்கள் எதிர் பார்ப்பு.