கொள்ளிடம் ஆற்றில் இருந்து வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான குடிநீர் குழாய்கள் பாபநாசம் – வலங்கைமான் சாலை வழியாக பின்னர் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலை வழியாக சாலையின் மையப்பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி குடிதண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களால் அவ்வப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரி செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் அருகே வலங்கைமான்- பாபநாசம் சாலையில் சிங்கு தெரு பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக குடிநீர் வீணாக்குவதோடு சாலையும் பழுதடைந்து அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கூட்டுக்குடி நீர்த்திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.