ஓஎன்ஜிசி நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்குத் தரும் முன்னுரிமையைவிட பணியாளர்கள், சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிறுவனமாகும். எனவே தான் கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக அதனுடைய பணிகள் நடைபெற்றுவரும் எட்டு மாவட்டங்களிலும் விபத்துகளோ பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஒரு சிறிதும் இன்றி பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி மக்களின் தேவைக்காக சமூகப் பொறுப்புணர்வுடன் பணியாற்றி வருகிறது.

அவசரகால நிகழ்வுகள் ஒரு வேளை ஏற்பட்டால் எப்படிச் செயலாற்றி அதனால் ஏற்பட வாய்ப்பிருக்கும் பாதிப்புகளைத் தவிர்ப்பது என்பதற்கான பயிற்சி இந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் குறித்த ஒத்திகைகளும் (MOCK DRILL) பல்வேறு நிலைகளில் பயிற்சி செய்யப்படுகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடனான பேரிடர் மேலாண்மை திட்டம் (DISASTER MANAGEMENT PLAN) எங்களிடம் உள்ளது. இது அவசரகால சூழ்நிலைகளை சந்திக்கத் தேவையான நடவடிக்கையை எளிதாக்குகிறது.
இதிலே மூன்று விதமான பேரிடர் நிலைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன:
பேரிடர் நிலை-I: நிறுவனத்தின் பணி மையத்தின் உள்ளே சிறிய அளவிலான இடர்கள் ஏற்பட்டால் அதனை அங்கேயே இருக்கும் பேரிடர் பாதுகாப்பு ஆதாரங்களின் உதவியுடன் நிலையைக் கட்டுப்படுத்துவது.
பேரிடர் நிலை-II: கொஞ்சம் அதிகப்படி அபாய நிலை என்று உணரும் போது நிறுவனத்தின் வேறு பணிமையங்களில் இருந்து பேரிடர் பாதுகாப்பு ஆதாரங்களைத் தருவித்து அவசர நிலையைக் கட்டுப்படுத்துவது.
பேரிடர் நிலை-III: பெரிய அளவிலான அபாயம் என்று வந்துவிட்டால் நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியைத் தாண்டி உள்ளூர் நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் அருகிலிருக்கும் மாநில / மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசரநிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சரி செய்வது
(11.11.2024) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஓஎன்ஜிசி கோவில்களப்பால் எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் பேரிடர் காலப் பாதுகாப்பு குறித்த மூன்றாம்நிலை ஒத்திகை நிகழ்ச்சி ஓஎன்ஜிசி நிறுவனத்தால் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்டது
பணிமையத்தின் உள்ளே ஏற்பட்ட சிறு தீ விபத்து பேரிடர் நிலை-1 மற்றும் நிலை–2 ஐயும் தாண்டி பெரிய அளவில் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்று மூன்றாம் நிலைக்கு வந்து விட்டால் அதனை எப்படிக் கட்டுப்படுத்தி அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பதை ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் செயல்படுத்திக் காட்டினர்
கோவில்களப்பல் சேகரிப்பு நிலையத்தில் ஏற்கெனவே இருக்கின்ற தீயணைப்பு வளையம் மற்றும் வசதிகள் போதாது என்கிற நிலையில் ஓஎன்ஜிசி-யின் இதர நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளும், கோட்டூரில் இருந்து அரசு தீயணைப்பு வண்டி ஒன்றும் உடனடி உதவிக்கு வந்தன. ஓஎன்ஜிசி-யின் ஆம்புலன்ஸ் வண்டிக்கு உதவியாக மன்னார்குடி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சில நிமிடங்களில் உதவிக்கு வந்தது.
காவேரி அஸட்டின் செயல் இயக்குநர் உதய் பஸ்வான் காரைக்கால் பேரிடர் கட்டுப்பாடு அறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்ட காவேரி அசட் சப்போர்ட் மேனேஜர் மாறன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழிகாட்டலில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்வு நடத்திக் காட்டப்பட்டது ஓஎன்ஜிசி யின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்று இந்த ஒத்திகையின் போது தம்முடைய சிறப்பான பங்களிப்பை வழங்கினர் மொத்த நிகழ்ச்சியையும் பணிப்பாதுகாப்புத் துறை பொது மேலாளர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்