மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா,மகிழ் முற்றம் தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா, தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்றுநர் சிவபார்வதி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். மாணவ மாணவியரின் பறை இசை, சிலம்பம், கவிதை, பேச்சு, நடனம், நாட்டியம், மாறுவேடம், கட்டுரை, ஓவியம், நாடகம் முதலியன நடைபெற்றது.
நேரு மாமா வேடமணிந்து ஏராளமான மாணவர்கள் வருகை புரிந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சவுத் இந்தியன் வங்கி மேலாளர் அருண் சான்றிதழ்கள் வழங்கினார். ஆசிரியை அனுஷியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.
மகிழ் முற்றம் தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சிவபார்வதி முன்னிலை வகித்தார். ஆசிரியை அம்பிகா வரவேற்றார்.
தலைமை பண்பை வளர்க்கும் விதமாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணைகளை தலைப்பாக கொண்டு ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டன. குறிஞ்சி குழு தலைவராக ஆசிரியை விஜயலட்சுமி மாணவர் தலைவராக ஆஜிதா பேகம், முல்லை குழு தலைவராக ஆசிரியை அனுசியா மாணவர் தலைவராக பாண்டி லட்சுமி, மருதம் குழு தலைவராக ஆசிரியை அருவகம் மாணவர் தலைவராக பைரோஸ்பானு, நெய்தல் குழு தலைவராக ஆசிரியை சித்ரா மாணவர் தலைவராக
ஜெயஸ்ரீ,பாலைக் குழு தலைவராக ஆசிரியர் ராஜ வடிவேல் மாணவர் தலைவராக சாதனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். குழுக்களுக்கான கொடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. குழுத் தலைவருக்கு தலையில் ரிப்பன் கட்டப்பட்டது. ஆசிரியர்களுக்கு பேஜ் அணிவிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
விழாவை ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆசிரியை அகிலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்ச்செல்வி, சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.