திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட உழைப்பால் இந்த இடத்திற்கு வரவில்லை. தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல் என தருமபுரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.

தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் களஆய்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சி தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஆக்கவேண்டும் என அவர்கள் கேட்டுகொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொது செயளாளர் கே.பி.முனுசாமி
வருகிற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்காக கள ஆய்வு நடத்தி வருகிறோம். தனிப்பட்ட கொலைகளை சட்ட ஒழுங்காக கருதக்கூடாது என வயது முதிர்வின் காரணமாக ஆர்.எஸ்.பாரதி பேசி இருக்கிறார்.

பொது இடத்தில் ஒருவன் வெட்டுகிறான் என்றால் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இங்கே வெட்டினாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற மன நிலைக்கு வந்துவிட்டதால் வெட்டுகிறான்.

அந்த மனநிலையில்லாமல் அவன் பயப்படக்கூடிய நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக வெட்டி இருக்க மாட்டான். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் எங்கேயேனும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று ஆர்.எஸ்.பாரதியை கேட்க விரும்புகிறேன்.

மருது அழகுராஜ் விரக்தியில் எதையெதையோ பேசுகிறார். யாரையோ திருப்தி படுத்துவதற்காக பேசுகிறார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட உழைப்பால், இந்த இடத்திற்கு வரவில்லை. தாத்தா, அப்பா, அடுத்தது மகன் என்ற நிலையில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

இது வாரிசு அரசியல். அண்ணாமலை என்பவர் ஒரு தேசிய கட்சியின் தலைவர் அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார் அதன் பிறகு போய்விடுவார்.

நடிகர் விஜய் இப்பொழுதுதான் கட்சியை தொடங்கி இருக்கிறார். ஆனால் அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. இங்கு வாரிசு அரசியல் இல்லை. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கட்சியை தொடங்கி மறைந்த போது அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. அதேபோலவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. ஆனால் இந்தக் கட்சியில் உழைப்பவர்கள் தானாக தலைவராக வந்திருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறை வரும்பொழுது தலைவர்கள் தானாக வருவார்கள். அதிமுகவில் உழைப்பவர்கள் தானாக உயர்ந்த இடத்திற்கு வர முடியும் என்பதற்கு நாங்களே சான்று என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *