கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் ஊராட்சி ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் நேற்று நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனிநபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவும், கிராம சபைக் கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கிராம சபை கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருட்கள் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கிராம வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பட்டா கோரி இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் போதும். உங்களுக்கான பட்டா வீடு தேடி வரும் முழுப்புலம் பட்டா எனில் 15 நாட்களிலும், உட்பிரிவு பட்டா எனில் 30 நாட்களிலும் வந்துவிடும். மேலும், உங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது கைப்பேசிக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தங்கள் மனுவின் நிலை குறித்து வீட்டிலிருந்தே அறிந்துகொள்ளலாம். மேலும், வருமான சான்று, வாரிசுச் சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தாலே போதும். தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் மூலம் தமிழக அரசின் சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பணியாளர்கள் வீடுவிடாக சென்று மருந்து தெளித்து வருகின்றனர். பணியாளர்கள் மருந்து தெளிக்க வரும்போது, வீட்டு உரிமையாளர்கள் அவர்ளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கொசுக்களை ஒழித்து நோய் பரவுதலை முழுவதும் கட்டுப்படுத்த முடியும். அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதால் ஈட்டும் வருமானம் பெருமை தராது. கடந்த ஆண்டு வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 98 சதவீதம் மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வருகின்ற ஆண்டு தேர்வில் 100 சதவீதம் மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற பெற்றோர்களாகிய உங்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி ஷபானா அஞ்சும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவராஜன், வரக்கால்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.