ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
திருவாரூர், நவ.24- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் கடந்த ஆறு வருடமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட இதில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகம், குறிப்பேடு உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்படவில்லை. உடனடியாக இந்த மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். இந்த கல்வி ஆண்டு இரண்டாம் பருவம் நடைபெற்று வரும் நிலையில், முதல் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு பருவத்திற்கும் சீருடை வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் வரவு செலவுகளை வெளிப்படை தன்மையோடு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் கட்டணமாக இன்சூரன்ஸ் தொகை வசூல் செய்யப்படுகிறது. இதனை வரைமுறைப்படுத்தி குறைந்த தொகையில் இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய விகிதத்தை விட கூடுதலாக பிடித்த தொகை திரும்ப வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நீட்டிப்பு பெறும்போது அவர்களுக்கு 80 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனை மாற்றி 100% ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு அமைக்கும் போது தரைமட்ட அளவில் மின்சாதன பொருட்கள் நிறுவப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு மின் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை மாணவர்கள் கைப்படாத தூரத்தில் உயர்த்தி நிறுவ வேண்டும். பள்ளிகளில் தேவையற்ற நபர்கள் நுழையாமல் தடுத்து, மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் காவலர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து விருது வழங்கும் போது பள்ளியின் வளர்ச்சிக்கு, தேவையான நிதியினையும் ஊக்கப் பரிசாக வழங்க வேண்டும். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், செல்வமணி, மேனாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், மாவட்ட மகளிர் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மற்றும் வட்டாரச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.