வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரவலர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரவலர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தை.பாரதிதாசன் தலைமை தாங்கினார்.

பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் மோ. திவ்யா வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கீழ அமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கோ. பாலசுந்தரம், பாடகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மு. சரவண குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைமை பொறுப்பாசிரியர் அ. டேவிட் ஞானராஜ் அவர்களின் கடும் சீரிய முயற்சியால் அவரின் நண்பர்களிடம் பள்ளிக்குத் தேவையான வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு உபயோகப்படக்கூடிய புத்தகப் பை, சீருடை, தேர்வு அட்டை, குடிதண்ணீர் பாட்டில், காலனி (சூ),பென்சில்& பேனா பாக்ஸ், காலுறை, ரிப்பன், பெல்ட், அடையாள அட்டை ஆகியவை பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.

சுமார் ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கிய குழந்தைசாமி, சாந்தா மேரி, மைக்கேல் பெனிட்டா மற்றும் ரெக்ஸ் கிரிஜா ஆகிய சமூக ஆர்வலர்களுக்கு பெற்றோர்களின் சார்பிலும், பள்ளியின் ஆசிரியர்களின் சார்பிலும் பள்ளியின் தலைமை பொறுப்பாசிரியர் அ. டேவிட் ஞான ராஜ் அனைவருக்கும் நன்றி கூறி நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *