ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே பொது பாதை ஒன்று செல்கிறது.

அந்தப் பாதை வழியாக சிவகாமிபுரம், விஷ்ணு நகர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினர் அந்தப் பாதை நடுவே கற்களை ஊன்றி கொடிகளையும் கட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்து, யாரும் நடக்க முடியாத அளவிற்கு செய்தனர்.

இது குறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன்மற்றும் ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் அசோக் பாபு தலைமையில் வருவாய் துறையினரும், காவல்துறையினரும் விரைந்து சென்று இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கற்களை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணப்படும் என அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் இன்று பாதையை ஆக்கிரமிப்புகளை அகற்றி, கற்களை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என கூறி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டனர்.

ராஜபாளையம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார். இதை ஏற்காத மக்கள் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடங்கியார் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்
அசோக் பாபு தலைமையில் காவல்துறையினர் வந்து
சாலை மறியில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து உயரதிகாரிகளிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறிய உறுதிமொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *