தஞ்சை
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் தஞ்சாவூர் முப்படை வீரர்கள் சோழ தேசம் படைவீரர் நலச் சங்கத்தின் நிறுவனர் கணேஷ்குமார் தலைவர் ராமச்சந்திரன் செயலாளர் சத்தியசீலன் பொருளாளர் நம்பி விக்ரமன் துணைத்தலைவர் சந்திரசேகரன் துணை செயலாளர் லெட்சுமிபதி செய்திதொடர்பாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை வீரர்களுக்கும், வீரர்களின் குடும்பத்திற்கும் அவர்களின் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முப்படை வீரர்களுக்கு என புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கொள்கை முடிவு சட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசு களுக்கிடையே ஒரே மாதிரியான சட்டமாக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்து வரும் முப்படை வீரர்களுக்கு உள்நாட்டு அரசியல் நிர்வாகங்களில் பங்களிக்கும் மற்றும் பங்கேற்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் போன்றவற்றில் கட்டாய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

முப்படை வீரர்களின் தியாகங்களையும் துன்பங்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதுவே நிதர்சனமான உண்மை. ஆகவே நாட்டின் பாதுகாப்பிற்கான முப்படைகளின் செயல்பாடுகள் முப்படை வீரர்களின் செயல்பாடுகள் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை நெருக்கடி கால நிலைகளில் அவர்களின் செயல்பாடுகள் போர்க்காலங்களில் அவர்களின் வீரம் தியாகம் துயரம் போன்றவற்றை விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் திரைப்படம் செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலமாகவும் மற்றும் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களின் மூலமாகவும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தி நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய முழுமையான விழிப்புணர்வையும் தேசப்பற்றையும் ஏற்படுத்தி இளைஞர்கள் முப்படைகளில் சேர்வதற்கான உந்துதலையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தாமதம் இன்றி முன்னுரிமை அடிப்படையில் உடனே செய்திட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *