திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் அமைக்கவும் வாய்க்கால்கள் தூர்வாரவும் வேண்டும் சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் கோரிக்கை.
.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேசியபோது கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. இதில் தூர்வாரப்படாததால் ஆறுகளை விட மேடான நிலையில் வாய்க்கால்கள் இருந்து வருகிறது. இதனால் ஆறுகளில் குறைந்த தண்ணீர் வரும்போது வாய்க்கால்களில் ஏறி பாசனப்பகுதிகளுக்கு செல்வதில்லை. எனவே இதனை சரி செய்யும் வகையில் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து தர வேண்டும். மேலும் தூர்ந்துபோய் மேடாக உள்ள வாய்க்கால்களை தூர் வரவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, உறுப்பினர் தெரிவித்தபடி விவசாயத்திற்கு தடுப்பணைகள் நல்ல தீர்வை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் நிதி ஒதுக்கீடு கிடைத்த பின் தடுப்பணைகள் கட்டித் தரப்படும் மேலும் வருகின்ற ஆண்டில் தூர்வார்கின்ற பணிகளை மேற்கொள்கின்ற போது உறுப்பினர் தெரிவித்த வாய்க்கால்களையும் கணக்கில் கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
