அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னையாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற ஒரு முதுமொழி உள்ளது. அதேபோல் பிச்சை புகினும் கற்றல் நன்றே என்று ஒரு பழமொழியும் உள்ளது.

இவைகள் எல்லாம் கற்றலின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது. படிப்பின் அவசியத்தையும் முக்கியத்தையும் மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பழமொழிகள் ஏற்பட்டன.
ஆனால் நம் புதுவையில் ஆங்காங்கே மது கடைகள் புற்றீசல் போல் பெருக தொடங்கிவிட்டது. மதுக்கடைகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பதும் இந்த அரசுதான், அதே வேளையில் ஆலயம் பள்ளிக்கூடம் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அருகாமையில் மதுக்கடைகளை திறப்பதற்கும் அனுமதி இல்லை என்று சொல்லுவதும் இதே அரசுதான். இவைகள் இவ்வாறு இருக்க புதுவை சூரமங்கலம் கூட்ரோடு அருகே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் பள்ளிக்கூடத்திற்கு மிக மிக அருகில் ரெஸ்டோபார் திறப்பதற்கு வேலைகள் ஆயத்தமாக நடந்து வருகிறது.
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மேற்படி பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட பலர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மேற்படி பார் இயங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அப்படி வழங்கினால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்