தாராபுரம்:விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு!

விவசாய விளைநிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களிடம் விவசாயிகள் பேச்சு வார்த்தை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கரூர் வரை சாலையோரமாகவும், விவசாயம் இல்லாத நிலங்கள் வழியாகவும் இரும்பு குழாய் பதித்து எரிவாயு மற்றும் குருடு ஆயில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் கிராம பகுதியில் நிலத்தின் கீழ் ஏற்கனவே செல்லும் இரும்பு குழாயில் இருந்து புதிதாக பெங்களூரு, தேவனகொந்தி வரை 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய் பதித்து ஆயில் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலிய நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

அதன்படி இந்த குழாய் முத்தூர் அருகே சாந்தலிங்கபுரம், நம்பகவுண்டன்பாளையம், மலையத்தாபாளையம் பகுதி கீழ்பவானி பாசன விவசாய விளைநிலங்களில் சுமார் 10 அடி ஆழத்தில் 45 அடி அகலத்தில் குழிதோண்டி குழாய் பதித்து மேட்டுக்கடை வரை கொண்டு சென்று பின்னர் மீண்டும் சாலையோரத்தில் பெங்களூரு வரை கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் வேளாண் நிலம் பாதிக்கப்படும் என்றும், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாராபுரத்தில் வியாழக்கிழமை இன்று இரவு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோரை சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இதுபற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தார்.
மேலும் கோவை திருப்பூர் மாவட்டம் பாரத் பெட்ரோலிய ஐ டி பி எல் எண்ணை குழாய் மாற்று வழி திட்ட கோரிக்கை மாநாடு வரும் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காங்கேயம்-காடையூர் எஸ்.எஸ்.மஹாலில் நடைபெற உள்ளது ஐ டி பி எல் எண்ணை குழாய் மாற்றுவழி குழு சார்பில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோருக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *