வடசென்னையில் 10 நாட்களுக்கு முன்பாகவே களை கட்ட தொடங்கிய பொங்கல் பண்டிகை
கிராமத்தை சென்னை நகருக்கு அழைத்து வந்த பள்ளி குழந்தைகள்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் மலர் கான்வென்ட் மழலைகள் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிராமத்தை நினைவு கூறும் வகையில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற பொங்கல் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கள் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் இன்று பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி குழந்தைகள் பரத நாட்டியம், கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குறவர் ஆட்டம் போன்றவற்றை நடனமாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும் தமிழக வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை விளையாடி கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் நிகழ்வுகளை சென்னை நகருக்கு அழைத்து வந்தனர்.
மேலும் கிராமங்களில் பொங்கல் பண்டிகையிலும், விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் மாடுகளை அழைத்து வந்து மரியாதை செலுத்தி 10 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பள்ளி குழந்தைகள் அமர வைக்கப்பட்டு சோலையப்பன் தெரு, தணிகாசலம் தெரு, கப்பல் போலு தெரு ஆகிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று அப்பகுதியில் இருந்தவர்களுக்கு ஆரவாரமாக பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
எங்கள் பள்ளியில் மண்மணக்கும் பொங்கலை கொண்டாடி வருகிறோம். கிராமத்து நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் குழுந்தைகளை மாட்டு வண்டிகயில் அழைத்து செல்ல வேண்டும் மற்றும் கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குறவர் ஆட்டம் ஆகியவற்றை குழந்தைகள் ஆடி மகிழ்ந்தனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்ற கிராமிய நிகழ்ச்சிகளுடனான பொங்கல் பண்டிகையை நாங்கள் கொண்டாடி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.