மதுரை திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்-முஸ்லிம் அமைப்பினர் 300 பேர் கைது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டு கிடாயு டன் சென்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மலை ஏற அனுமதி மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புகள் அனுமதி கோரினர். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், முஸ்லிம்கள் பலர் திரண்டனர். இந்த தகவல் தெரிந்ததும் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் ராஜேஷ்வரி வனிதா, திருமலைகுமார், ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்டபெண்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.