எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா. 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு. சிலம்பாட்டம்,வாள் வாள்வீச்சு, சுருள் வாள், அலங்கார சிலம்பம், ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ். இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பக்கலையை பயிற்றுவித்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து இருந்து வருகிறார். இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை இன்று கொண்டாடினர். சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர்,கொள்ளிடம்,பாதரக்குடி,முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 200 க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ, மாணவிகள்,பெற்றோர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.புளிச்சக்காடு சீனவாச பெருமாள் கோவிலில் இருந்து பெற்றோர்கள் சீர்வரிசை ஏந்தி,தாரை தப்பட்டை இசை வாத்தியங்கள் முழங்க சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக விழா மைதானத்தை வந்தடைந்தனர்.
தொடர்ந்து பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, சுருள்வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கள் வைத்து படையலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.