முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் இன்றைய தினம் தேரோட்டம் மாலை நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.
மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ,மதுரை ,விருதுநகர்எஸ்பிக்கள் ,ஐஜி தலைமையில் தென் மாவட்டங்களில் இருந்து 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பழனி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.