காங்கேயம்,
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் நாள் தேரோட்டம் துவங்கியது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 17ம் தேதி வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வீரகாளியம்மன் திருவுலா காட்சி, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, அடிவாரம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி எழுந்தருளல், மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்வேலையில் சுவாமி இரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4:45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேயசிவசேனாபதி, திருப்பூர் கலெக்டர் கிருஸ்துரைாஜ், திருப்பூர் இந்துசமயஅறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, தாராபுரம் கோட்டாச்சியர் செந்தில்அரசன், சிவன்மலை உதவி ஆணையர் அன்னக்கொடி(பொருப்பு), திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தமாக விடியல்சேகர், காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்திபன், காங்கேயம் யூனியன் சேர்மன் மகேஷ்குமார், துணைசேர்மன் ஜீவிதாஜவஹர், சின்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுக்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கிரிவல பாதையில், அசைந்தாடியபடி, திருத்தேர் உலா வந்தது. 200 மீட்டர் தூரம் இழுக்கப்பட்டு நடு வீதியில் 5:20 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது.

இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து, தேர் நிலைக்கு வரும். இந்த தேரோட்டத்தில் திருப்பூர், காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *