ராஜபாளையத்தில் இரு நாட்கள் நடந்த குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் திருவிழா

3 மாதங்களில் மாவட்டம் முழுவதும் காமிக்ஸ் நூலகம் அமைக்க திட்டம்
ராஜபாளையத்தில் இரு நாட்கள் நடந்த சித்திரக்கதைகள் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ராஜபாளையத்தை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் 3 மாதங்களுக்கும் காமிக்ஸ் நூலகங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.
சித்திரக் கதைகள் திருவிழாவில் கார்ட்டூன் முக கவசம் தயாரித்தல், கேலிச் சித்திரம் வரைதல், பொம்மலாட்டம், புனைவு கதை ஆடை அணிந்து நடித்தல், கதைகளுக்கு ஏற்ப சித்திரம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சித்திரக் கதைகள் குறித்து இயக்குநர் சிம்புதேவன், பேராசிரியர் வில்வம், பதிப்பாளர் கலீல், சித்திரக் கதைகள் ஆய்வாளர் பிரபாவதி, லயன் காமிக்ஸ் விஜயன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரும், அரசு பள்ளி ஆசிரியர் சங்கர்ராமின் வால் கோமாளி கதையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில்: தமிழகத்தின்
கலை இலக்கிய தலைநகராக ராஜபாளையம் நூறாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மகாத்மா காந்தி இங்கு 3 முறை வந்துள்ளார்.
150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூரில் நூலகம் அமைத்து உள்ளார். சிவகாசியில் 10 ஆயிரம் நூல்களை கொண்ட தமிழ் இலக்கியங்களுக்கான நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது.
ராஜபாளையம் காமிக்ஸ் நூலகம் இந்தியாவுக்கு வெளிச்சம் அளித்துள்ளது. வாசிப்பு அனுபவம் வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்க காமிக்ஸ் புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கும். அடுத்த 3 மாதங்களில் மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் காமிக்ஸ் நூலகம் ஏற்படுத்தப்படும். மேலும் பள்ளிகள் மற்றும் ஏற்கனேவே உள்ள நூலகங்களில் காமிக்ஸ் நூல்களுக்கான தனி பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.