பரமத்தி வேலூர் அருகே பூட்டிய வீட்டில் 20 சவரன் நகைகள் திருட்டு திருடர்கள் கைவரிசை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே எல்லமேடு மெயின் ரோடு ஓரத்தில் குடியிருந்து வருபவர் அரசு கல்லூரி பேராசிரியை கீதாராணி (37). இவருக்கு 4 மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இவர் நாமக்கல் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை சுப்பு ஏற்கனவே இறந்து விட்டார். இவரது தாய் சரஸ்வதி (65) இந்நிலையில் கீதாராணியும், அவரது தாயுடன் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீதாராணியும் அவரது தாய் சரஸ்வதியும் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
அங்கு கோவிலில் தரிசனம் செய்து விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளனர் வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது அதிர்ச்சி அடைந்த கீதாராணி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கீதா ராணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் .
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 21 ஆம் தேதி இரவு முதல் நேற்று இரவு வரை பதிவான பதிவுகளை கைப்பற்றி ரோடு வழியாக சென்றவர்களையும், இந்த வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது மோப்பநாய் அங்கும் இங்கும் ஓடிச்சென்று தார் ரோட்டில் ஓரத்தில் நின்றது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பூட்டு , பீரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் கை ரேகை பதிவு செய்து உள்ளனர்.
நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் கீதாராணி அவரது தாய் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்டிருந்து நடு இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்