
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் மார்க்கெட்டில் 200 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த பேரூராட்சி அலுவலர் நடவடிக்கை.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் நாட்டு மீன்களும்,கடல் மீன்களும் விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு விற்பனை செய்யக்கூடிய மீன்கள் நீட்ட நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்து கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்வதாக வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலர்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து இன்று பேரூராட்சி அலுவலர் அருள்மொழி மற்றும் போலீஸார், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீன் மார்க்கெட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.
இதில் கெட்டுப் போன நிலையில் இருந்த 200 கிலோ மீன்களை டிராக்டரில் ஏற்றி பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அழுகிய மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் இது போன்ற தவறு நடக்க கூடாது எனவும், மொத்தமாக மீன்கள் வாங்கும் இடத்தில் ஆய்வு செய்து சோதனை இட்டு நல்ல மீன்களை மட்டும் வாங்கி வருமாறு அறிவுறுத்தினார்.
மேலும் விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்று அதற்கான சான்றிதழை கடைகளில் வைத்திருக்க வேண்டும் எனவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலர் எச்சரித்தார்.