தஞ்சாவூர்,
திடக்கழிவு மேலாண்மை திட்டங்களில் இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, சிட்டிஸ் 2.0 திட்டத்தில் ரூ.165 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி சிட்டிஸ் 2.0 சீர்மிகு நகரங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை பணிகள் புதுமையாகவும், ஒருங்கிணைத்தும், நிலை நிறுத்தவும் முதலீடு செய்வதற்கான திட்டம் சிட்டிஸ் 2.0 தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முன்மொழிவு கடிதம் அனுப்பியது.

இதில் முதல் சுற்றில் மொத்தம் 84 மாநகராட்சிகள் பங்கு பெற்றன. இவற்றின் திட்ட வரைவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் அமைத்த வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து, இரண்டாம் சுற்றுக்கு 36 நகரங்களை தேர்வு செய்தது.
இதில் தஞ்சாவூர் மாநகராட்சி சிட்டி 2.0 குழுவினர் பங்கேற்றனர்.

இந்திய அளவில் தேர்வான 18 மாநகராட்சிகளில், தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற தஞ்சாவூர் மாநகராட்சி கடும் போட்டிகளுக்கு இடையே வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்.3, 4, 5 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச விழா நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சிட்டில் 2.0 திட்டத்தின் கீ்ழ் ரூ.165 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு 2026-ம் ஆண்டுக்குள் “தஞ்சை மாநகரம் தூய்மை மாநகரமாக” உதயமாகும். தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 51 வார்டுகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட உள்ள 14 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து தினசரி சேகரமாகும் 155 டன் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து 12 நுண்ணுரமாக்கும் செயலாக்க மையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த சிட்டிஸ 2.0 மூலமாக தஞ்சாவூர மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் குப்பைகளை உயிரியல் முனையம் மூலமாக முற்றிலும் அகற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏற்கெனவே இருக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களுடன் புதிதாக 200-க்கும் மேற்பட்ட பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் வாங்குதல், அதிநவீன இயந்திரங்களை கொண்டு குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், புதிதாக இணைக்கப்படவுள்ள ஊராட்சிகளிலும் நுண்ணுரம் செயலாக்க மையம் தொடங்கப்பட உள்ளது.தஞ்சாவூர் மாநகராட்சியில் குடிநீர் தேவை தற்போது திருப்தியாக உள்ளது. பற்றாக்குறை ஏதும் கிடையாது. தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது 80 சதவீத சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.இன்னும் 20 சதவீத சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக்குழுத் தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *