கமுதியில் மீனவ கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் மீனவ இளைஞர்கள் 1000 பேர் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையில் சேர்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்கபட்டு, மீனவ இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும், அதனால் மீனவ குடும்பங்கள் முன்னேறும் என கடந்த 2022 ம் ஆண்டு அறிவித்து இருந்தார்.அதன்படி கமுதி, கடலூர், கன்னியாகுமரியில் வருடத்திற்கு 120 பேர் தேர்வு செய்யபட்டு பயிற்சி கொடுக்கபடுகிறது.
அதன்படி கடலோர பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 40 இளைஞர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி -கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாகத்தில் மூன்றாம் ஆண்டு 90 நாள் பயிற்சி கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்று நிறைவு விழா நடைபெற்றது.
கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராமநாதபுரம் மீன்வள துறை துணை இயக்குநர் ஜெயக்குமார், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜன், கமுதி காவல் ஆய்வாளர் தெய்வீகப்பாண்டியன்,கடலோர காவல் பயிற்சியாளர் காளிமுத்து, மதியழகன், இராமர், முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர்.90 நாட்கள் உணவு, உறைவிடம் கொடுத்து ஏற்பாடு செய்து பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையில் வேலையில் சேர இந்த சான்றிதழ்க்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் மீனவ குடும்பத்தினர் பெரிதும் பயன் அடைவர்.
கடந்த ஆண்டு கமுதி தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 6 பேர் பிஎஸ்எப் ராணுவம் உள்ளிட்டவற்றில் தேர்வு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.