வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

கீழ விடையல் ஊராட்சியில் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல வீடுகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறினார். ஊரக வீடுகள் பழுது நீக்கம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். மேல விடையல் ஊராட்சி மாஞ்சேரியில் நபார்டு திட்டம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு அதில் உள்ள குறைகளை உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கலெக்டர் மோகனச்சந்திரன் அங்கு தனக்கு ரத்த அழுத்தம் எந்த அளவு உள்ளது என்று சோதனை செய்து கொண்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள கழிவறை வசதிகளை ஆய்வு செய்து கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுரை கூறினார். கோவிந்தகுடி ஊராட்சியில் வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் வார சந்தையை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.