இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முதுகுளத்தூர் பஜார் மற்றும் பேருந்து நிலையம், செல்லி அம்மன் கோவில் தெரு, மற்றும் முக்கியவீதிகளில், தெரு நாய்கள் ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் விரட்டி கடிக்க பாய்கின்றன.
இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. மேலும் தெரு நாய்களுக்குள் சண்டை நடக்கும் போது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது நாய்கள் விழும் நிலை உள்ளது. இதனால் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் பீதி அடைகின்றனர்.
இதை நிலை தொடராமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும்.
இதற்காக பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றி, நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.