மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
குத்தகை நில சாகுபடியாளர்களின் உரிமைகளுக்காக ஏப்.17-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் மயிலாடுதுறையில் அறிவிப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 47,000 கோயில்களுக்குச் சொந்தமாக சுமார் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை 98 சதவீத இந்து ஏழை, எளிய மக்கள் குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக செலுத்தப்பட்டுவந்த பகுதிமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாடகை முறை கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும் இந்த முறையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. தற்போது சட்டப்பிரிவு 32ஏ விதியின்படி அந்த பகுதியின் சந்தை மதிப்பின்படி பல மடங்கு உயர்த்தி வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பல தலைமுறைகளாக நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் குத்தகை உரிமையை மறுத்து நிலங்களை பொது ஏலம் விடும் நடவடிக்கை தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படுகிறது. அறநிலையத்துறையின் இத்தகைய முயற்சிகளை கண்டித்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஏப்.17-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கை வரும் நாளில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார். விவசாய சங்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.