வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரகத் திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரகத் திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசு ஆண்டு தோறும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வலங்கைமான் ஒன்றியம் தென்குவள வேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மீனரோசினி, சுபிகா, பிரியாங்கா, சுனிஷ்கர், விஷ்வா, ரித்தீஷ் ஆகிய ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் மீனரோசினி என்ற மாணவி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. வெற்றி வேலன் தலைமை வகித்தார்.
வலங்கைமான் வட்டாரக் கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினர். பள்ளியின் ஆசியர்கள் சூரியகுமார், ராமமூர்த்தி, இளையராஜா, விஜயகுமாரி, ரேணுகா, சுதா ஆகியோரும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.