திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மே 4-ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தையொட்டி, பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் தங்கள் இன்னுயிரையும் பணையம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் தியாக சீலர்களான வீரர்களுக்கு நன்றி செலுத்தி, பாராட்டு தெரிவிக்கும் விதமாக, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களை, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் நேரில் சந்தித்து அன்பையும், நட்பையும் பறிமாறிக் கொண்டார்கள். அதுசமயம் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:-
நாட்டில் எவ்வளவோ வேலைகள், பதவிகள், பணிகள் இருந்தாலும் மனநிறைவைத் தரக்கூடிய பணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாகும். பாதுகாப்பு என்பது விதிவிலக்கு இன்றி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு விஷயமாகும். “முதலில் பாதுகாப்பு! பிறகு பணி!” என்பதை தாரக மந்திரமாகவே சில நிறுவனங்கள் கொண்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் மழை நீரில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றியது அனைவருடைய பார்வைக்கும் சென்றது.
பாதிக்கப்பட்டவரை தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து காப்பாற்ற வேண்டும் என்கின்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அவரவர் கொண்டுள்ள இறை நம்பிக்கையும், வழிபாடும், சான்றோர்களின் ஆசியும் ஒரு பாதுகாப்பு வளையமாக எப்போதும் இருக்கும். கும்பாபிஷேகம், பெரு விழாக்கள் மற்றும் மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று சுவாமிகள் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் உள்ளிட்டோர் இன்முகத்துடன் வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சுவாமிகளுடன் பட்டீஸ்வரம் பணி ஒய்வு ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிப் பேசினார்.