தென்காசி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று குடிமகன் ஒருவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் குத்தபாஞ்சான் அருகே உள்ள காளத்திமடம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுக்க வருகை தந்துள்ளார்.
நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலங்குளம் அருகே உள்ள காளத்தி மடம் பகுதியைச் சார்ந்த மனோகரன் என்பவர் கொடுத்துள்ள கோரிக்கை
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் முயற்சி செய்வதாக தகவல் பரவி வருகிறது. இது எனக்கு மட்டுமல்ல எங்கள் பகுதியில் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் கடந்த 8 ஆண்டு காலமாக இந்த கடையில் மது வாங்கி அருந்தி வருகிறோம். காளத்திமடம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களான அய்யனூர், குத்தபாஞ்சான், ராம்நகர், புதுப்பட்டி ஆகிய கிராம மக்களும் இந்த கடையில் மது வாங்கி அருந்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திடீரென அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த ஏராளமான குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே குடிமகன்களின் நலன் கருதி புதுப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினை எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
அவரது கோரிக்கை மனிதனைப் பெற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மனுவை படித்ததும் அதிர்ச்சி அடைந்தார். உங்களது கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.