கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் திமுக கொடி கம்பம் அகற்றப்படாததால் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நட ஆலோசித்த போது அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற கட்சிகளுக்கு மதுரை நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அகரம் கிராமத்தில் உள்ள திமுக கொடி கம்பகத்தை அகற்றப்படாமல் இருந்து வந்த்து. அனைத்து கட்சிகளை சேர்ந்த கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில் திமுக கொடி கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கவியரசு உத்திரவின் பேரில் புதியதாக கொடி கம்பம் அமைப்பதற்காக பாஜக அரசு தொடர்பு மாவட்ட தலைவர் தருமன் தலைமையில் அகரம் கிராமத்தில் ஆலோசனை செய்தனர்.
அப்போது அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா, மற்றும் பாரூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் பாஜக பிரமுகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாலைக்குள் திமுக கொடி கம்பத்தை அகற்றுவதாக உறுதியளித்தையடுத்து புதிய கொடி கம்பம் அமைக்கும் ஆலோசனையை தற்காலிகமாக ரத்து செய்தனர். பாஜகவினர் புதிய கொடி கம்பம் அமைப்பதாக எழுந்த சர்ச்சை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.