பாப்பா என்கிற அம்மா நூல்’: வெளியீட்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வீனஸ் வித்யாலயா பள்ளியில் நேற்று கவிஞர் ரமேஷ் கண்ணா எழுதிய ‘பாப்பா என்கிற அம்மா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கவிஞர் பூங்குயில் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனிவாசன், தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத் வித்யாலயா பள்ளி தாளாளர் ச. காசி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா.இந்திர ராஜன், மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அருட்சக்தி ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் ஆகியோர் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கேப்டன் பிரபாகரன், கவிஞர் தமிழ்ராசா, எக்ஸ்னோரா மலர் சாதிக், கவிஞர் தங்கராசு, கவிஞர் எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை பதிப்பக ஆசிரியர் அறம் அமரேசன் தொகுத்து வழங்கினார். இறுதியில் நூல் ஆசிரியர் கவிஞர் ரமேஷ் கண்ணா ஏற்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.