கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கடத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எரிவாயு மயானம் அமைத்து தர வேண்டும் என்ற வலியுறுத்தல் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆறு வருடம் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த எரிவாயு தகன மேடை பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் கேஸ் மணி தலைமையில் சிறப்பு விழாவாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் வினோத், பேரூராட்சி அலுவலர்கள் தங்கமணி, துப்புரவு ஆய்வாளர் விக்னேஷ், விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம், இதுவரை திறந்த வெளியில் பாரம்பரிய முறையில் நடைபெற்று வந்த இறுதிச் சடங்குகள் இனி சுத்தமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத முறையில் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மரக்கட்டைகள் பயன்பாடு குறையும் என்பதால் காற்று மாசுபாடும் கட்டுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *