கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
தலைமையில் நடைபெற்றது
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கிடவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி,வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பதில் ஊடகங்கள் ஆற்றும் பங்கினை பெரிதும் பாராட்டுகிறது. அண்மைக் காலங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிடப்படுவது கடுமையான தேர்தல் முறைகேடாக உருவெடுத்துள்ளது. இது நேர்மையான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாகும். இது தேர்தல் செலவின வரம்புகளை மீறும் செயலாகும்.
ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தேர்தல் சார்பாகவோ அல்லது வாக்காளர் பட்டியல் சார்பாகவோ நாளிதழ்கள், தொலைக் காட்சி, பண்பலைகளில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து உரிய விளக்கம் தெரிவித்திட வேண்டும். தேர்தல் மற்றும் தேர்தல் சார்ந்த செய்திகளை பொதுமக்கள் அறியும்வண்ணம் தினந்தோறும் செய்திகள் வெளியிட வேண்டும். சமூக வலைதளங்களில் கட்சியினரோ, கட்சி சார்பாகவோ அல்லது பிற கட்சியின் மூலமாகவோ பிறிதொரு கட்சியின் தனிப்பட்ட முறையினை விமர்சித்து வீடியோவாக வெளியிடுவதை கண்காணித்திட வேண்டும்.
தேர்தல் நடத்தும் விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரும்பட்சத்தில் அன்றிலிருந்து ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயல்பட துவங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி,குழு உறுப்பினர் (தூர்தர்ஷன்) இளஞ்செழியன், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.