100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூக்கலாம்பட்டி, கோம்பை, ஏரிக்காடு, வைரிசெட்டிபாளையம் உள்ளிட்ட குக் கிராமங்களை உள்ளடக்கிய வைரி செட்டிபாளையம் ஊராட்சியில் 100 வேலை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஊராட்சியில் 1800க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை அட்டைதாரர்கள் உள்ளனர்.
இதில் ஒரு குழுவிற்கு 25 பேர் வீதம் 3 குழுக்கள் மூலம் 75 பேருக்கு மட்டுமே நூறு நாள் வேலை அளிக்கப்பட்டு வருவதாகவும், தினமும் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று(14/06/2026) முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக ஏரகுடி வழக்கறிஞர் து.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மங்கப்பட்டி முத்துக்குமார்,வி.தொ.ச.ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் 600-க்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்(கி) பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், நூறு நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் பிரசாத்,பணி மேற்பார்வையாளர்கள்,துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா, உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிரிஜா, கிராம நிர்வாக அலுவலர் (பொ) தீபா, வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினமும் 75 பேர் வீதம் 3 குழுக்கள் மூலம் 225 பேருக்கு நூறு நாள் வேலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் மாலை வரை வைரிசெட்டிபாளையம் ஊராட்சி அலுவலகப் பகுதிகளில் பரபரப்பாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தொடர் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்