திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நடப்பாண்டில் சுமார் 8,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் முன் பட்ட குறுவையாக சுமார் 2,000 ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு, முன்கூட்டியே மூடப்பட்டது.

வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றன.

கோடை சாகுபடி ஆக வலங்கைமான் மற்றும் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவைப் பட்டம் சூன், சூலை மாதங்களில் துவங்கும் இப்பருவம், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முடிவடைகிறது.

120 நாட்களைக் கொண்ட இந்த குறுவை பருவம், குறுகிய கால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். அதனை அடுத்து வலங்கைமான் தாலுக்காவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

வலங்கைமான் தாலுக்காவில் குருவை சாகுபடி மொத்த இலக்கான 8,000 ஏக்கரில் சுமார் முன்பட்ட குறுவை சாகுபடி சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன் பட்ட குறுவையில் நேரடி விதைப்பு, இயந்திர நடவு, கை நடவு முறையில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இருப்பினும் நேரடி விதைப்பு புழுதி முறையில் மேற்கொள்ளப்படாமல் சேற்று உழவு செய்யப்பட்டு மேற்கொள்ளப் படுகின்றது. சேற்று உழவு மூலம் நேரடி விதைப்பு அதிக அளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. நேரடி விதைப்பு முறை என்பது நெல் விதைகளை நேரடியாக வயலில் விதைக்கும் முறையாகும்.

இது நாற்றங்கால் தயாரித்தல் மற்றும் நாற்றுகளை வயலில் நடுவதற்கான பாரம்பரிய முறையை விட நேரத்தையும், நீரையும் சேமிக்க உதவுகிறது. குறிப்பாக இது நெல் சாகுபடியில் ஒரு நீர் சேமிப்பு முறையாகும். இது விவசாயிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது. குறிப்பாக பெரிய நிலப்பரப்புகளில் விவசாயம் செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நிலத்தை உழுது, தண்ணீரை பாய்ச்சி, பின் விதைகளை விதைக்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிவாய்க்கால்கள் தூர்வாரியது குறுவை பட்டத்தில் இயந்திரம் நடவிற்கு தொகுப்பு வழங்குவது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தட்டுப்பாடு இன்றி வழங்குவது போன்ற காரணங்கள் வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். குறுவை சாகுபடி உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கான அனைத்து முன்னெடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *