பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துதான் கலந்து கொள்ள வேண்டும் தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு.
ஆசிரியர்கள் குமுறல்….
நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவுரைகள் மற்றும் கலந்தாய் விற்கான கால அட்டவணை விவரம் நேற்றைய தினம் தொடக்கக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட செயல்முறைகளில் இதுவரை நடைபெற்ற கலந்தாய்வுகளில் இல்லாத நடைமுறையாக பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க கட்டாயம் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டும் என குறிப்பிடப்
பட்டுள்ள செய்தி,
ஆசிரியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வரை நடந்து முடிந்த அனைத்து பொது மாறுதல் கலந்தாய்வுகளிலும் பங்கேற்ற சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அன்றைய தினத்திற்கான வருகை சான்று வழங்கப்பட்டு ஆசிரியர்களின் வருகை பதிவேட்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பிறபணி என பதிவுகள் மேற்கொள்ளப்
பட்டது
நடைமுறை யாக இருந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தான் பங்கேற்க வேண்டும் என்பது யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான அறிவிப்பாக உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற வட்டாரக்கல்வி அலுவலர்களுக்
கான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து தான் கலந்து கொண்டார்களா?.
எதிர் வருங்காலங் களில் நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்க இருக்கும் தலைமை ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தான் கலந்து கொள்ள வேண்டுமா ?. அந்தந்த மாவட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் களால் நடத்தப்படும் கூட்டங்களில் எதிர்வரும் காலங்களில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தான் பங்கேற்க வேண்டுமா?.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களுக்காக நடைபெறும் பயிற்சிகளில் (எண்ணும் எழுத்தும் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும்) கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துதான் கலந்து கொள்ள வேண்டுமா?.
தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லக்கூடிய ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டுதான் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமா?. தொடக்கக் கல்வித் துறையில் முகாம் அலுவலர்களாக பணியாற்றக் கூடிய அலுவலர்கள் தங்களது அலுவலகத்தை விட்டு துறை சார்ந்த பணிகளுக்காக வெளியில் செல்லும்போது எதிர்வரும் காலங்களில் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டுதான் துறை சார்ந்த பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஐயங்களை ஏற்படுத்துகிறது.
எனவே,தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் கடந்த கால பொது மாறுதல் நடைமுறைகளை ஆய்வு செய்து நடப்பாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் நாட்களுக்கு தற்செயல் விடுப்பு இல்லாமல் பிற பணி என அனுமதித்து அன்றைய தினத்திற்கான வருகை சான்றிதழையும் கடந்த காலங்களில் வழங்கியது போன்று இந்தாண்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மாவட்டச்செயலாளர் பெ. சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.