காஞ்சிபுரம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பென்னலூர் மற்றும் கடுவஞ்சேரி கிராமங்களில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF), தமிழ்நாட்டு கிராமங்களில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பென்னலூர் மற்றும் கடுவஞ்சேரி கிராமங்களில் இரண்டு உயர்நிலை நீர்த்தொட்டிகள் (மொத்த கொள்ளளவு – 90,000 லி), ஆழ்துளை கிணறுகள், குழாய் இணைப்புகள் மற்றும் நீரேற்று மோட்டார் அறைகள் உள்ளிட்ட பிரத்தியேக குடிநீர் விநியோக அமைப்பை உருவாக்கித் தந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு கோபாலகிருஷ்ணன் C S மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் திரு. கருணாநிதி S D, இந்த குடிநீர் விநியோக அமைப்பை பென்னலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் திரு. செந்தில் ராஜன் S, பென்னலூர் பஞ்சாயத்து தலைவர் திருமிகு. கல்பனா யுவராஜ் மற்றும் கடுவஞ்சேரி பஞ்சாயத்து தலைவர் திருமிகு. வசந்தா சித்திரை ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இந்த இரு கிராமங்களில் வசிக்கும் சுமார் 5,200 மக்களுக்கு இடைவிடாது பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இம்முயற்சி, இந்த பகுதியின் நிலைப்புத்தன்மை மிக்க சமூக மேம்பாட்டின் மீது ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளைக்கு உள்ள அக்கறையின் மற்றுமொரு சான்றாக இது அமைகிறது.

பென்னலூர் மற்றும் கடுவஞ்சேரி கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க, இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்ளளவு திறன் உயர்த்தும் இத்திட்டத்தை ரூ.1.60 கோடி செலவில் HMIF செய்து முடித்துள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய HMIF அறங்காவலர் திரு. கோபாலகிருஷ்ணன் C S அவர்கள், “இந்த முயற்சி, நீடித்த சமூகநலனை உருவாக்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வழிநடத்தும் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்னும் ஹூண்டாயின் உலகளாவிய கொள்கையைப் பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம், சமூக ஆரோக்கியம் மற்றும் பொதுநலன் எனும் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய முனைகிறோம். நாங்கள் சேவையாற்றும் சமூகத்திற்கு நீண்டகால அடிப்படையிலான மதிப்பை வழங்கும் நிலைப்புத்தன்மைமிக்க தீர்வுகளை கட்டமைப்பதில் எங்களுக்கு உள்ள அக்கறையை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது,” என்றார்.

பல ஆண்டுகளாக, HMIF பென்னலூர் கிராமத்தில் மணிக்கு 1000 லிட்டர் திறன் கொண்ட RO குடிநீர் அமைப்பு, கழிவறை கட்டுமானம் உள்ளிட்ட சுகாதார திட்டங்கள், மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆரோக்கியம் & ஊட்டச்சத்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், கடுவஞ்சேரி கிராமத்தில், வெள்ள நிவாரணம் மற்றும் அரசு பள்ளி கட்டிட புனரமைப்பிற்கும் உதவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *