பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து, மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்தன.
இம்முகாமை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் இணைந்து திறந்து வைத்தனர்.
முகாமின் தலைமை அமர்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அரியலூர் உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமைத் தொடங்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
மாநிலத்தளத்தில் வருடத்திற்கு இருமுறை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதுடன், வேலை நாடுநர்களுக்கு தகுதிப் பயிற்சிகள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்ற 2,049 வேலைவாய்ப்பு முகாம்களில், 60,057 நிறுவனங்கள் பங்கேற்று, 2.49 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைய முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 2,711 வேலை நாடுநர்கள் (1,217 ஆண்கள், 1,494 பெண்கள்) முகாமில் கலந்து கொண்டனர். இதில் 271 நபர்களுக்கு (124 ஆண்கள், 147 பெண்கள்) தகுந்த பணிநியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. மேலும், இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வுக்காக 406 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை 49 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இம்முகாம்களில் 27,561 பேர் பங்கேற்று 5,088 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர். தற்போதைய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 33,000-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூரில், 38,000-க்கும் மேற்பட்டோர் அரியலூரில் பதிவு செய்துள்ளனர்.
முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இரா.அருணகிரி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லி.சாகுல் ஹமீது ராஜலட்சுமி பள்ளியின் தாளாளர் ராஜகோபால் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வினோத்குமார் உதவியாளர் கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.