தென்காசி,தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தாரம்மன் கோயில் சமையலறை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஸ்ரீ. முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பக்தர்கள் அமரும் கூடம், சமையலறை ஆகியவை கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதை அகற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னத் தம்பி என்ற பாலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தாகவும்,. இது குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க தென்காசி கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலங்குளம் தாசில்தார் ஓசன்னா பெர்னான்டோ, டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ்,இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் ஆகியோர் முன்னிலையில் கோவில் சமையலறையை அகற்ற நேற்று காலை வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள், மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பை கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர் கோவில் சமையலறையை அகற்றினார்கள்.
இக்கோயில் கடந்த 13 வருடங்களுக்குப் பின்பு 15 நாட்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறப்பட்ட இடங்கள் அகற்றப்பட்ட போது சுமார் 45 வருடங்களுக்கு முன்பே இருந்த கால பைரவர் சிலையும் அகற்றப்பட்டது.
மேலும் சமையல் அறையில் இடிக்க அதிகாரிகள் தீவிரமாகிய நிலையில் அங்கிருந்த கோவில் நிர்வாகிகள் உள்ளே இருக்கும் சாமி சிலைகள், விளக்குகள், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் பாத்திரங்கள் ஆகியவற்றை எடுப்பதற்கு கூட அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
இந்த சம்பவம் இந்த பகுதி பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியையும், அதிகாரிகள் மீது அதிருப்தியையும் உண்டாக்கி உள்ளது.