திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே முருகன் மரணம் தொடர்பாக திராவிடத் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
CBCID விசாரணை நடத்தக் கோரிக்கை – மர்ம மரணம் புதிய பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சென்னாக்கள்பாளையத்தில் கூலித் தொழிலாளி முருகன் (42) மர்மமான முறையில் உயிரிழந்தது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேப்பமரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கயிறு கொண்டு தூக்கில் தொங்கிய அவருடைய உடல் கடந்த கடந்த மாதம் 26ஆம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அலங்கியம் காவல்துறையினர் காசநோயால் மனமுடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்து, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் உடலை ஒப்படைத்து, உடனே மின் மயானத்தில் உடலை எரித்துவிட்டனர்.
இந்த மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை நிலைய செயலாளர் பேரறிவாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முருகனின் மரணத்திற்கு பின்னால் கோரமான கதி இருப்பதாக வலியுறுத்தப்பட்டு, CBCID மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
முருகன், பழனிச்சாமி கவுண்டர் என அழைக்கப்படும் விவசாயியின் தோட்டத்தில் ஆடுகளை மேய்க்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி மணிமேகலை, அந்த வீட்டு வேலைக்காரியாக இருந்ததுடன், இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மரணம் இடம்பெற்ற நிலத்தில் மரத்திற்குள் கயிறு கட்டப்பட்ட விதமும், அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
இந்த மரணம் ஒரு திட்டமிட்டக் கொலை என்று சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்கொலை என முடிவுக்கு வந்த காவல்துறையின் நடவடிக்கையும் சந்தேகத்திற்கிடமானது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சமூகநீதி, சாதி அடிப்படையிலான வன்முறை உள்ளிட்ட அவலங்களை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதியை உறுதி செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் திராவிடத் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.