திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்-டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஒத்திகை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்ட புண்ணிய தலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 14-ந் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாகநடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அறங் காவலர் குழு முழு முயற்சியால் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் 20 திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிலின் கம்பீரமான ஏழுநிலைகொண்ட ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபி ஷேகம் நடந்த மறு நிமிடமே பக்தர்களுக்கு டிரோன் மூலமாக புனித நீர் தெளிப் பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது. அதன்படி கோவிலின் கோபுரம் மற்றும் சன்னதி தெருவில் டிரோன் பறக்கவிடப்பட்டு ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கும்பாபிஷேகத்தில் அடிப்படை வசதி குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பேசினார்.