திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கொம்பு தமிழர் காற்று இசை கருவி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கொம்பு தமிழர் காற்று இசை கருவி குறித்து பேசுகையில், நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செய்யபட்ட கொம்பைவிட வெண்கல வார்பினால் செய்யப்பட்ட கொம்பில் ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும். இரண்டு பாகங்களை பொருத்தி வாசிக்கப்படும் கொம்பு ஆங்கில எழுத்தான S வடிவத்தில் வைத்து வாசிக்க முடியும். அதே போல அதை மேல் நோக்கி திருப்பி அரைவட்ட வடிவிலும் வாசிக்க முடியும். உலோக
கொம்பு இசைக் கருவி சுமார் நான்கு முதல் ஆறு அடிவரை இருக்கும். இதை இசைக்கும் கலைஞர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம் யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகிறது. அக்காலத்தில் மன்னர் வெளியே வந்தாலும், போரில் வெற்றி பெற்றாலும் கொம்பு ஊதப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான கொம்பு தற்போது சில கோயில் விழாக்களில் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்தக் கருவியை வாசிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது என்றார்.