திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆன்லைனில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 573 விவசாயிகள் கொண்டு வந்த 83.091 மெட்ரிக் டன் பருத்தியை ஏலமிடப்பட்டதில் கும்பகோணம், கொங்கணாபுரம், திருப்பூர், பண்ருட்டி, செம்பனார்கோயில் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 569 க்கும், சராசரியாக ரூ. 7 ஆயிரத்து 443 க்கும் விற்பனையானது. மேற்படி ஏலத்தில் ரூ.61.85 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த ஏலத்தினை திருச்சிராப்பள்ளி விற்பனை குழு செயலாளர் ரவி மற்றும் தேசிய வேளாண் சந்தை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் பருத்தியினை நன்கு காய வைத்து அயல் பொருள்களின்றி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று பயனடையும்படி திருவாரூர் விற்பனை கூட செயலாளர் கண்ணன் மற்றும் வலங்கைமான் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.