திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது.

பள்ளி
தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில்,
தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி,ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ரூ1000 நாணயம் குறித்து நாணயவியல் சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீஸ்வரர் கோயில், இந்திய கட்டிடக்கலையின் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும்.16 ஆம் நூற்றாண்டு அரணான சுவர்களுக்கு மத்தியில் இந்த கோவில் உள்ளது. கோவில் கோபுரம் – 216 அடி (66 மீ) உயரம் கொண்டது.

16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட நுழைவாயிலில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை உள்ளது. கி.பி.1010ல் தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட ‘பெரிய கோயில்’ என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் செப்டம்பர் மாதம் 2010 ஆண்டில் 1000 ஆண்டுகள் நிறைவடைந்தது.

பிரம்மாண்டமான கட்டமைப்பின் 1000 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், மத்திய, மாநில அரசு பல கலாச்சார நிகழ்வுகளை நடத்தியது.
செப்டம்பர் 26, 2010 அன்று (பெரிய கோவிலின் ஐந்தாவது நாள் ஆயிரமாண்டு கொண்டாட்டம்), நாட்டின் கலாச்சார, கட்டிடக்கலை, கல்வெட்டு வரலாற்றில் பெரிய கோவிலின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 216 அடி உயரம் கொண்ட இந்திய ராஜகோபுரத்தின் சிறப்பு 5 அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கோயில் மாதிரி பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

மேலும் ₹1000 மற்றும் ₹5 பிரகதீஸ்வரர் கோயில் UNC நாணயம் மும்பை நாணயத்தால் வெளியிட்டது .1000 ரூபாய் நாணயம் வெள்ளி கலவையிலான உலோகத்தில் 35 கிராம் எடையில் 44 மி.மீ. விட்டத்தில் வட்ட வடிவை கொண்டது.

நாணயத்தின் முன்பக்கம் அசோகத் தூணில் உள்ள சிங்கத் தலை பொறிப்பின் சத்யமேவஜெயதே 1000 ரூபாய் என அச்சிட்டு பக்கவாட்டில் இந்தியா ரூபாய் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் பின்பக்கம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடக்கலையினை எடுத்துரைக்கும் வகையில், கோவில் அச்சிட்டு 1000 ஆண்டுகள் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் என ஆங்கிலம் ஹிந்தி மொழியில் நாணயத்தின் பக்கவாட்டில் அச்சிடப்பட்டுள்ளது. மும்பை அக்கச்சாலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ரூ1000 நாணயம் அச்சிடப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *