பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் 44வது வருடாந்திர பேரவைக் கூட்டம் வர்த்தக சபை அரங்கில் இன்று நடந்தது. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான (2025-2028) செயற்குழு, நிர்வாகக்குழு நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் முத்துசாமி, உபதலைவர்கள் சந்திரன், நாகமாணிக்கம், எம்.கே.ஜி. ஆனந்தகுமார், செயலாளர் சபரி.எஸ்.கண்ணன்,இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் பாலாஜி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை துவங்கப்பட்ட நாளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் “சேம்பர் டே” கொண்டாடப்படும். அந்நாளில் விழா எடுத்து நமது பகுதியில் தொழில் சார்ந்து சிறந்து விளங்குபவர்களுக்கு வர்த்தக சபையின் விருதுகள் வழங்கப்படும்.

பொள்ளாச்சி மற்றும் 5 தாலுக்காக்களை உள்ளடக்கி, 2 ஆயிரத்து 771 சதுரகிலோமீட்டர் பரப்பளவும், 13 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகையும் கொண்ட பொள்ளாச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில் நிலைய சந்திப்பில் புதிய ரயில்கள் தேவை அதகரித்துள்ளது. கோவில்பாளையம் ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொள்ளாச்சி சென்னை இடையே போத்தனூர் – கோவை – ஈரோடு – சேலம் மார்க்கத்தில் தினந்தோறும் இரவு நேர புதிய ரயில் இயக்க வேண்டும்.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தோட்டக்கலைத்துறையின் சார்பில் பொள்ளாச்சி பகுதியை தென்னை உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் வர்த்தக மேம்பாடு ஏற்றுமதி போன்ற பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை அறிவித்து அதற்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *