தாளவாடி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கரும்பு லாரிகளை தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றி வருகின்றன. தாளவாடி மற்றும் சாம்ராஜ் நகரில் இருந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசி பார்க்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேரி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி – சத்தியமங்கலம் செல்லும் வழியில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் வனச் சோதனைச் சாவடி அருகே அவ்வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி காட்டு யானைகள் தனது தும்பிக்கையால் கரும்பை எடுத்து தின்றது. நீண்ட நேரம் லாரியை வழிமறித்து அட்டகாசம் செய்தபடியே கரும்புகளை தனது குட்டியுடன் காட்டு யானைகள் ருசி பார்த்தது. இந்தக் காட்சியை பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டது வைரலாகி உள்ளது. சமீப காலமாக தாளவாடி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்