கோவை
கோவையின் அடையாளமாக திகழும் இஸ்கான் கோவிலில் தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட 13 அடி விட்டமும் 1 டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம் (சக்கரத்தாழ்வார்) பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.
கோவையின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் இஸ்கான் வளாகத்தில், கட்டுமானத்தில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவிலின் கோபுரத்தின் உச்சியில் மிகவும் புனிதமான சுதர்சன சக்கரத்தின் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கிய இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதர்சன சக்கரத்திற்கு அபிஷேகம், ஆராதனை, கீர்த்தனை பஜனைகளுடன் செய்யப்பட்டது. தவத்திரு பக்தி வினோத சுவாமியின் சொற்பொழிவு நடைபெற்றது. பள்ளி குழந்தைகள், ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து, சுதர்சன ஸ்துதியை பாடினர்.
வேத மரபுப்படி, தரையிலிருந்து 108 அடி உயரத்தில், கோபுரத்தின் மீது, தென்னிந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான 13 அடி விட்டம் கொண்ட, தங்க முலாம் பூசப்பட்ட சுதர்சன சக்கரம், பக்தர்களின் ஆரவாரமான “ஹரே கிருஷ்ணா” கோஷத்துடன், கிரேன்களின் உதவியுடன் நிறுவப்பட்டது. பக்தர்களுக்கு தீமைகளை அகற்றி, ஆன்மிக காப்பு வழங்கும் சக்தி வாய்ந்த இந்த சக்கரம், இஸ்கானின் ஆன்மீக ஒளிக்கூறாகவும், கோவையின் அடையாளமாகவும் வானத்தில் ஒளிரப் போகிறது.
இன்று நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களிலும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.